Saturday, August 16, 2008

டேட்டா எண்ட்டரி வேலை # 2

எமது முந்தைய பதிவான டேட்டா எண்ட்டரி வேலை # 1-க்கு பின்னூட்டம் மூலம் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி.


ஒரு சிலர் மேக்ரோ என்றால் என்ன என்று கற்றுக் கொடுங்கள், செய்து தருகிறோம் என்று கூறியிருந்தனர்.

பெயர் வெளியிட விரும்பாத பிரபல தமிழ்ப் பதிவர் ஒருவர், Excel, Word  போன்றவைகளே ஒழுங்காக தெரியாது என்றும், அவற்றைப் பற்றி தெரிவித்து விட்டு இது போன்ற வேலைகளை போஸ்ட் செய்யலாம் என்றும் அட்வைஸித்திருந்தார்.

எல்லா ஆலோசனைகளுக்கும் நன்றி. எதேல்லாம் எனக்கு தெரிகிறதோ, அதையெல்லாம் ஒவ்வொன்றாக தெரிவிக்கிறேன்.


இப்போது அடுத்த டேட்டா எண்ட்டரி வேலை இதோ.. (இது போன்ற டேட்டா எண்ட்டரி வேலைகள் தவிர அவ்வப்போது பொதுவான டேட்டா எண்ட்டரி விஷயங்கள் குறித்தும் வழக்கமான பதிவுகள் கண்டிப்பாக வெளிவரும்!)

****

superpages.com, yellowpages.com, yell.com.uk போன்ற வலைத்தளங்களை பார்த்திருக்கிறீர்கள் தானே?


அவற்றிலிருந்து தகவல்களை இறக்குமதி செய்து Excel / Access கோப்புகளாக தருவதற்கான மென்பொருள் எழுதத் தெரியுமா உங்களுக்கு?

உதாரணத்திற்கு தான் மேற்கண்ட வலைத்தளங்கள் தந்திருக்கிறேன். இதே போன்ற பல்லாயிரக்கணக்கான வலைத் தளங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து மார்க்கெட்டிங் உபயோகத்திற்காக பலரும் தகவல்களை எடுத்து தரச் சொல்லி கேட்பார்கள்.


முன் அனுபவம் எதுவும் இருக்கிறதா?

பின்னூட்டம் மூலம் தொடர்பு கொள்ளுங்களேன்.

***
இப்போதைக்கு இங்கே பிரசுரிக்கும் வேலைகள் குறித்து உங்களுக்கு பரிட்சயம் இருந்தால் மட்டும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.


டேட்டா எண்ட்டரி வேலைகள் குறித்து சந்தேகம் எதுவும் இருந்தால் சம்பந்தப்பட்ட பதிவுகளில் பின்னூட்டமிடுங்கள்.

மற்றபடி resume அனுப்புவது, தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிகளை தந்து தொடர்பு கொள்ளச் சொல்வது போன்றவைகளை தற்போதைக்கு தயவு செய்து தவிர்க்கவும்.

ஒவ்வொரு வேலை வரும் போதும் அது குறித்து இங்கே தெரியப்படுத்தும் போது அது சம்பந்தமாக பின்னூட்டமிடவும்.

நன்றி.

Thursday, August 14, 2008

டேட்டா எண்ட்டரி வேலை #1

டேட்டா எண்ட்டரி வேலைகளின் அடிப்படை என்ன என்பது குறித்து கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


ஆனால் ஏற்கனவே இது குறித்து கொஞ்சமாவது தெரிந்த சிலர், 'சீக்கிரமா மேட்டருக்கு வாங்க' என்று பின்னூட்டம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சரி, நீங்கள் Excelலில் கடை தேர்ந்தவரா? Excel Macro குறித்து நன்கு தெரியுமா?

உங்களுக்கு ஓரு சில வேலைகள் காத்திருக்கின்றன. (கவலை வேண்டாம், செய்யும் வேலைக்கு சன்மானம் தரப்படும்!)

எக்ஸெல் மேக்ரோ எதுவும் நீங்கள் வடிவமைத்திருந்தால் screen shot அல்லது demo அனுப்பவும். ( mediafire.com என்ற இணைய தளத்தில் அப்லோடு செய்து அதன் லிங்க்கை அனுப்பலாம்)

பின்னூட்டத்தில் அது குறித்து தெரிவிக்கவும். கூடவே உங்கள் பின்னூட்டத்தை பிரசுரிக்கலாமா வேண்டாமா என்பது குறித்தும் தெரியப்படுத்தவும்.


மற்ற விபரங்கள் விரைவில்...

உஷாருய்யா உஷாரு!

மனுஷன் நேரிலே நிக்கும் போதே கமுக்கமா ஏமாத்துறானுக. கணினி மூலமா ஏமாத்துறதா கஷ்டம்?

கிரெடிட் கார்டுல எப்படி எல்லாம் ஏமாத்த முடியும்னு ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.

கடலை மிட்டாய் ரெண்டு ரூபாய்க்கு வாங்கிட்டு ஸ்டைலா கிரெடிட் கார்டை எடுத்து நீட்டுற ஆசாமியா நீங்க? அடுத்த தபா அப்படி நீட்டும் போது கிரெடிட் கார்டு மேல ஒரு கண்ணை வையுங்க. (கடலை மிட்டாயை அப்புறமா சாப்பிட்டுக்கலாம்)

உங்க கிரெடிட் கார்டை ஒரு மிஷினிலே வெச்சு ஒரு இழுப்பு இழுத்தா அந்த மேக்னெட்டிக் பார்ட்டிலே இருக்கிற அத்தனை டேட்டாவும் அப்படியே அந்த தம்மாத்தூண்டு மெஷினோட இணைக்கப்பட்ட கம்ப்யூட்டருக்கு ஓடிப் போயிடும். அப்புறம் என்ன, அதே மாதிரியே 'முன்சாமி விலங்கியல் மூன்றாமாண்டு' அப்படீன்னு 'டுபாக்கூர் வங்கி' வழங்கின கிரெடிட் கார்டை எடுத்துக்கிட்டு கடலை மிட்டாய்க்கடை அண்ணாத்தே இங்கே இருந்து மின்னஞ்சலில் கார்டு விபரங்களை தட்டி விட்டுடுவாரு. அதை எடுத்துக்கிட்டு அங்கே நம்மாளு கடைக்கு கெளம்பிடுவாரு. அடுத்த மாசம் பில் வரும் போது தான் உங்களுக்கு ஐயையோன்னு இருக்கும்.


"ஐயா, நான் இது வரைக்கும் பக்கத்திலே இருக்கிற கர்நாடகாவுக்கு கூட போனதில்ல. எங்கேயோ இருக்கிற கனடாவில என்னோட கார்டை எப்படிய்யா யூஸ் பண்ணியிருக்க முடியும்?" அப்படீன்னு உங்க கிரெடிட் கார்டு வங்கியில கேள்வி கேட்டு அவங்க விசாரணை நடத்தி, முடிவு உங்களுக்கு சாதகமா வர்றத்துக்குள்ள டங்கு டணாலாகிடுமில்ல?
இந்த பிரச்னையினால கிரெடிட் கார்டும் வேணாம், ஒண்ணும் வேணாம்னு கமுக்கமா இருக்கிறவங்க ரொம்ப பேரு. (ஹும் கிரெடிட் கார்டு இல்லாம நிம்மதியான வாழ்க்கை! கொடுத்து வெச்சவங்கப்பா!)

இதுவே, இணைய தளங்களுக்கு போய் உங்க கிரெடிட் கார்டு நம்பரை கொடுத்து பொருள் வாங்கணும்னா அவங்க ரொம்ப சுலபமா அதை எடுத்து அவங்க பங்குக்கு உபயோகப்படுத்திட்டாங்கன்னா என்ன ஆவுறது?

இதுக்கு தான் virtual credit card என்றெல்லாம் இருக்கு. இருந்தாலும் அதிலயும் கூட நிறைய ரிஸ்க் எல்லாம் இருக்கு.


(அது சரி, நீங்க உங்க ஆபிஸ் கம்ப்யூட்டரிலயோ, பிரவுசிங் செண்டர் கம்ப்யூட்டரிலயோ உங்க கிரெடிட் கார்டு number டைப் பண்றிங்க, அங்க உங்க மேலதிகாரியோ, பிரவுசிங் செண்டர் உரிமையாளரோ Key logger சாப்டுவேர் வெச்சிருந்தா நீங்க டைப் பண்ணுர ஒவ்வொரு எழுத்தும் அவங்களுக்கு தெரிஞ்சிடுமே! இது குறித்து பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்!)
பே-பால் மூலமா பொருள் வாங்கணும்னா உங்க கிரெடிட் கார்டு விபரங்கள் உங்களுக்கு பொருள் விற்பவருக்கு தெரியவே தெரியாது.

ஆனா, தில்லாலங்கடிகள் பே-பாலிலும் பயங்கர தில்லு முல்லு பண்ணுறானுங்க.

நீங்க ஒரு பே-பால் கணக்கு வெச்சிருக்கீங்கன்னு வெச்சுப்போம். (தொறந்திட்டீங்க தானே?). அதில குருவி (விஜய் படம் அல்ல) சேக்குற மாதிரி ஒரு ஆயிரம் டாலர் இருக்குன்னு வெச்சுப்போம்.

இப்போ உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும்.


அன்பார்ந்த ஏமாளியே,



உங்க PAYPALஅக்கவுண்ட்டை எவனோ லவுட்ட பாக்குறான். அதனால உடனடியா கீழே உள்ள லிங்க்கை சொடுக்கி உங்க பாஸ்வேர்டை கொடுத்திட்டு போங்க.
         
- இந்த மெயிலை பார்த்த உடனே, மேற்படி லிங்கை க்ளிக்கி, அங்க உங்க பேபால் யூசர் நேம், பாஸ்வேர்டு கொடுத்திட்டு உட்காந்தீங்கன்னா.......

.........
.........


உட்காந்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்.


இந்நேரம் உங்க கணக்கில இருந்த 1000 டாலரை மேற்படியான் தூக்கிட்டு ஓடியே போயிருப்பான். போற போக்கில உங்க PAYPAL  பாஸ்வேர்டு, மின்னஞ்சல் முகவரிகளையும் மாத்திட்டு போயே போயிடுவான்.


தலையில எட்டு மொழ வேட்டிய போட்டுக்கிட்டு மோட்டுவலையை பாத்துக்கிட்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான்.


கோவிந்தோ... கோவிந்தோ!


எப்படீன்னா, மேற்படியானுங்க PAYPAL வெப்சைட் மாதிரியே ஒரு டுபாக்கூர் வெப்சைட் தயார் பண்ணி அங்க உங்கள வர்ற மாதிரி ஈ-மெயில் அனுப்பிடுவானுங்க. நீங்களும் PAYPAL அப்படீன்னு லோகோ எல்லாம் பாத்துட்டு, "அடடே, நம்ம PAYPALகாரன் தான்" அப்படீன்னு பாஸ்வேர்டு டைப் பண்ணுவீங்க. அம்புட்டு தான். பாஸ்வேர்டு மேற்படியானுக்கு லட்டு மாதிரி போயிடும்.


அப்புறம் என்ன? அவன் காட்டுல சுனாமி தான்!


அதனால இப்படி ஒரு email வந்தா, அவன் அனுப்புற லிங்க்க்கு பதிலா, புதிசா நீங்களே http://www.paypal.com/ அப்படீன்னு டைப் பண்ணிட்டு போங்க.


அப்புறம் PAYPAL அனுப்பின அந்த ஈ-மெயிலிலே உங்களோட முழு பெயரும் இருக்கும். மேற்படியானுங்க அனுப்புர மெயிலிலே அப்படி இருக்காது.


PAYPAL வெப்சைட் https:// அப்படீன்னு இருக்கும். இவனுங்க கொடுக்கிற லிங்க் வெறும் http:// தான்.

இதே மாதிரி உங்க email முகவரி, வங்கிக் கணக்கு ஆன்லைன் எல்லாத்தையும் பாஸ்வேர்டு மாத்தச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பினா அவனுங்க அனுப்புற லிங்கை கிளிக்கிடவே கிளிக்கிடாதீங்க.

Tuesday, August 12, 2008

PAYPAL இருக்கா?



வீட்டிலிருந்தபடியே கணினி மூலம் சம்பாதிப்பது எப்படி என்று வரிசையாக பார்க்க போகிறோமே, அப்போது வெளிநாட்டிலிருந்து வந்து குவியப் போகும் வேலைகளுக்கு காசு எப்படி வாங்குவதாம்?



'என்னோட பேங்குக்கு அனுப்பிடுங்கப்பா' என்று சொன்னால் பாதிப்பேர் தலை தெறிக்க ஓடி விடுவார்கள். மீதிப் பேர் சரி சரி அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு வேலையை மட்டும் வாங்கிக் கொண்டு போயே போய் விடுவார்கள்.



'வாயில தோசை, பையில காசு' என்பது போல வேலையை முடித்தோமா, காசை பார்த்தோமா என்று இருக்க வேண்டும் என்பதற்காகவே இருக்கிறது : PAYPAL



இங்கே ஒரு கணக்கை துவக்கி வைத்துக் கொண்டால் போதும், உங்கள் ஈ-மெயில் முகவரியை கொடுத்தால் போதும், காசு அனுப்பி விடுவார்கள். நீங்களும் அந்தக் காசை உங்கள் வங்கிக் கணக்குக்கு வரவழைத்துக் கொள்ளலாம்.

இதற்கான கமிஷன் எவ்வளவு, எப்படி ரிஜிஸ்தர் செய்து கொள்வது என்பது போன்றவற்றை மேற்படி இணைய தளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம். அப்படியும் புரியாதவர்கள் பின்னூட்டத்தில் கேள்வி கேட்கவும். முடிந்தவரை விளக்குகிறேன்.

என்ன என்ன தேவை?

வீட்டிலிருந்தபடியே கணினி மூலம் சம்பாதிக்க பின் வருவன தேவை :

(1) கணினி (இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஓசியில் கிடைத்தால் உபயோகித்துக் கொள்ளலாம். அல்லது பிரவுசிங் செண்டரிலிருந்து சிறிது காலத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம்!)

(2) மின்சாரம் (எங்கிருந்து கணினியைப் பயன்படுத்தினாலும் மின்சாரம் கண்டிப்பாக தேவை. இதற்கு நாம் வேறு வழியே இல்லாமல் ஆற்காட்டாரை தான் நம்பியாக வேன்டும்! இல்லாவிட்டால் ஜெனரேட்டரோ, யூ.எஸ்.பி.யோ வாங்கி வைத்துக் கொள்ளவும்.

(3) கம்ப்யூட்டரில் வேலை செய்ய அதை செயல் படுத்த கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரை switch on, off எப்படி என்று தெரியாத ஆசாமியா நீங்கள்? தப்பேயில்லை, அதை முதலில் கற்றுக் கொள்ள முயலுங்கள்.

(4) இணைய தளத்தில் மேயத் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை தெரிந்திருக்க வேன்டும்.

(5) Excel, MS Word போன்றவை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

(6) எல்லாவற்றுக்கும் மேலாக கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்.

(7) மின்னஞ்சல் முகவரி வேண்டும்.

(8) ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகள் ஓரளவிற்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.

(9) மற்றபடி ஜாவா, ஆரக்கிள், இணைய தள வடிவமைப்பு, அது இதுவென்று வெளுத்து வாங்கும் ஆசாமியா நீங்கள்? அப்படியெனில் இன்னும் ஓரிரெண்டு பதிவுகள் வரை காத்திருங்கள்.

இதையெல்லாம் ரெடியாக்கி வைத்துக் கொண்டு அடுத்த பதிவுக்கு வாருங்களேன்.

வணக்கம்...

கம்ப்யூட்டர் என்றால் என்னவென்று கொஞ்சமாவது கற்றுக் கொண்ட அனைவருமே அடுத்த விநாடியே ஆராய முற்படுவது, வீட்டிலிருந்தபடியே இதில் ஏதாவது வேலை செய்து காசு பார்க்க முடியுமா என்பது தான்.
தவறில்லை.

நேர்மையாக வரும் ஒவ்வொரு காசுமே நல்லது தான்.

அதுவும் இந்த கால கட்டத்தில் கம்ப்யூட்டர் இல்லாவிட்டால் ஒரு பொழுதும் விடியாது. அதுவும் இணையம் என்று ஒன்று இல்லாவிட்டால் அவ்வளவு தான்.

முதலில் கம்ப்யூட்டரைக் கண்டு பிடித்தவருக்கும், இணையம் என்ற அற்புதத்தை கண்டு பிடித்தவருக்கும் ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

வீட்டிலிருந்தபடியே காசு பார்க்க முற்படும் அனைவரும், இணையத்தில் உள்ள தேடு பொறிகளுக்குச் சென்று 'work at home' என்று கொடுத்து வரும் விடைகளில் ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து எதுவும் சம்பாதிக்க வழி இருக்கிறதா என்று பார்க்க முற்படுகிறார்கள்.

இவற்றில் பலவும், "99 டாலர் கட்டுங்கள். அடுத்த விநாடியிலிருந்து மணி நேரத்துக்கு ஆயிரம் டாலர் சம்பாதிக்கலாம்' என்கிற ரீதியில் காதில் லாரி அளவு பூச் சுற்றும் விஷயங்கள் தான்.

இதில் காசு கொடுத்து 99 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல் போவது 100 %நிச்சயம்.

சரி வீட்டிலிருந்தபடியே கம்ப்யூட்டரில் காசு பார்க்க முடியாதா என்று கேட்கிறீர்களா?

ஏன் முடியாது?

இதில் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம், இதில் உள்ள ப்ளஸ், மைனஸ் என்ன என்பது குறித்தெல்லாம் வரிசையாக பார்க்கலாம் வாருங்கள்.
பின்னூட்டமிடும் போது உங்கள் பின்னூட்டத் தகவல்களை பொதுவில் வெளியிட வேண்டாம் என்றால் அதை முதல் வரியிலேயே, "பிரசுரத்திற்கு இல்லை" என்று தெரியப்படுத்திவிட்டு பின்னூட்டமிடவும்.